This Article is From Aug 13, 2019

காங்கிரஸ் மீது இவ்வளவு ஆத்திரத்தை வைத்துக்கொண்டு கூட்டணி வைத்தது ஏன்? கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ். காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பை நடத்தவில்லை என வைகோ காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

Advertisement
இந்தியா Written by

வைகோவிற்கு காங்கிரஸ் மீது இவ்வளவு கோபம் இருப்பது எனக்கு தெரியாது.

காங்கிரஸ் மீது இவ்வளவு ஆத்திரத்தை வைத்துக்கொண்டு கூட்டணி வைத்தது ஏன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்த போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ். காஷ்மீரில் காங்கிரஸ் ஏன் பொது வாக்கெடுப்பை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். தமிழீழப் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸை தான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நட்பு, நன்றி இவை இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என அவர் கடுமையாக விமர்சித்தார். 

வைகோவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்டவர். 18 ஆண்டுகள் எம்.பி. ஆக்கி அழகு பார்த்த கலைஞரின் முதுகில் குத்தியவர். 

Advertisement

நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பின் காரணமாகவே காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. இதனால் காஷ்மீருக்கு நேரு சிறப்பு அந்தஸ்தை வழங்கினார்.

இந்த வரலாறு தெரியாமல் வைகோ காங்கிரசை விமர்சித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 7 நிமிடத்தில் 6 நிமிடங்கள் காங்கிரசையே தாக்கி பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இதுதொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், காஷ்மீர் விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ரஜினி, நீட் தேர்வு, தகவல் அறியும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது உள்ளிட்ட மத்திய அரசின் பிற நிலைப்பாடுகளுக்கும் கருத்துக் கூற வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு காங்கிரஸ் மீது இவ்வளவு கோபம் இருப்பது எனக்கு தெரியாது. இவ்வளவு கோபத்தையும், ஆத்திரத்தையும் மனதில் வைத்துக்கொண்டு காங்கிரசுடன் வைகோ கூட்டணி வைத்திருக்க தேவையில்லை என்று அவர் கூறினார்.

Advertisement