மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை எழுப்பினார் வைகோ
இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் பற்றி மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை எழுப்பினார் வைகோ.
முன்னதாக, தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு வந்தததைத் தொடர்ந்து, வைகோ ராஜ்யசபா எம்.பி சீட்டிற்குப் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கும் எனப்பட்டது. ஆனால், கடைசியில் தேர்தல் ஆணையம், அவருக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், 15 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் வைகோ.
இதற்கு முன்னர் வைகோ, திமுக சார்பில் ராஜ்யசபாவிற்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1999 முதல் 2004 வரை அவர் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று லோக்சபா உறுப்பினராக இருந்தார் வைகோ.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எம்பிக்கள் 6 பேரும் இன்று பதவியேற்று கொண்டனர். இதில், மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, சுமார் 15 ஆண்டுகள் கழித்து திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் பற்றி மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை வைகோ எழுப்பினார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளால் இந்தியாவில் உள்ள நூற்பு ஆலைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதியாகவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என வைகோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உரையை நிறைவு செய்தார்.