அவர்கள் இருவருக்கும் இடையிலும் பல்வேறு கருத்து மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி கேட்ட கேள்விக்கு, தடாலடியான ரியாக்ஷனைக் கொடுத்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “ப.சிதம்பரம் பல நாட்கள் சிறையிலிருந்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார். அவர் பிணையில் வெளியே வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் மேட்டுப்பாளையத்தில் நடந்த கொடூர சம்பவம் மிகுவும் வருத்தமளிக்கிறது.
அப்பகுதியின் நடூரில் வசதி படைத்தவர், 20 அடிச் சுவரை எழுப்பியதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். அவரை கைது செய்யாமல், உறவினர்களின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடிய ஏழை எளிய மக்களிடம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது காவல் துறை. இது கண்டனத்துக்குரியது,” என்று பேசியவரை இடைமறித்த நிருபர் ஒருவர்,
“ஐயா, சீமான் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தது பற்றி..,” என்று கேள்வியை முடிக்கும் முன்னரே மிகுந்த சினம் கொண்டு நடையைக் கட்டினார் வைகோ. சீமானும் வைகோவும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக இருந்தாலும், அரசியல் களத்தில் வெவ்வேறு சித்தாந்தம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையிலும் பல்வேறு கருத்து மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேபோல சமீபத்தில் ஈழ விவகாரத்தில், காங்கிரஸை குற்றஞ்சாட்டி சாடினார் வைகோ. அதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பலர், கறாராக எதிர்வினையாற்றினார்கள்.
குறிப்பாக வைகோ, “காங்கிரஸ் ஒரு இனத் துரோகி. ஈழப் போரில் இலங்கையுடன் துணை நின்று பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது. அவர்களுக்கு என்றுமே மன்னிப்புக் கிடையாது,” என்றார். அதற்கு அழகிரி, “பிரபாகரின் இறப்புக்கேக் காரணம் வைகோதான். அவர் காங்கிரஸுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்,” என்று பதிலடி கொடுத்தார். பின்னர் திமுக தரப்பு பிரச்னையில் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியது.