Vaiko on Citizenship Bill - "இலங்கையில் இனப் படுகொலை செய்யப்படுவதால் அஞ்சி, கடந்த 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களின் உரிமை பற்றி இந்த மசோதா ஒன்றும் பேசவில்லை"
Citizenship Bill - மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று ஒப்புதல் பெற்றுவிட்டது. அடுத்ததாக இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுவிட்டால், மசோதா சட்டமாக மாறிவிடும். இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற விவாதத்தின்போது கடுமையாக வாதிட்டன. ராஜ்யசபா உறுப்பினராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (Vaiko), “இந்த மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்,” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) முன்னிலையில் கர்ஜித்தார்.
தனது உரையின் போது வைகோ, “சட்ட சாசனத்திற்கு எதிரான, மன்னிக்க முடியாத, நீதியற்றது குடியுரிமை திருத்த மசோதா. இந்த மசோதாவுக்கு 1000-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் கடுமையான எதிர்ப்பை மத்திய அரசிடம் பதிவு செய்துள்ளனர். இருந்தும் அதற்கு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை அரசு. பாகிஸ்தான், அப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருக்கும் முஸ்லிம் அல்லாத மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது இந்த மசோதா. இதில் மியான்மரில் கொன்று குவிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் இடமில்லை. அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பாகுபாடு பார்த்துள்ளது மத்திய அரசு. குறிப்பிட்ட மூன்று நாட்டு முஸ்லிம்களையும் விலக்கி வைத்துள்ளது அரசு.
இலங்கையில் இனப் படுகொலை செய்யப்படுவதால் அஞ்சி, கடந்த 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களின் உரிமை பற்றி இந்த மசோதா ஒன்றும் பேசவில்லை. மாறாக, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் இப்போது ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், அவர்களுடன் கை குலுக்குகிறது இந்திய அரசு. ஜனநாயக விரோதமான இந்த மசோதா வங்கக் கடலில் தூக்கியெறியப்பட வேண்டும்,” என்று கொந்தளித்தார். வைகோ பேசும்போது, பாஜகவினரும் ஒரு சிறிய சத்தத்தையும் எழுப்பாமல் உன்னிப்பாக கவனித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வைகோ பேசும்போது அவரையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். வைகோ பேசி முடித்து அமர்ந்தபோது, அவையே கரகோஷத்தால் அலறியது.
குடியுரிமை திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.