இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையினால் காற்று, நீர், நிலம் மாசுபடும் என்றும், அதனால் அப்பகுதி மக்களின் உடல்நலனுக்கு பெருங்கேடு விளையும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் கடந்த 22 ஆண்டுகளாக பொதுமக்கள் நலனுக்காக போராடி வருகிறார். இந்நிலையில், கடந்த 15.12.2018 அன்று டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து இன்று 07.01.2019 உச்ச நீதிமன்றத்தில் வைகோ அவர்கள் மேல் முறையீடு செய்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்தத் தடையை நீக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மூன்று வாரங்களில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், தமிழக அரசின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்னரே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா அளித்த மனு மீதான விசாரணையை ஜனவரி 8-ம் தேதி எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.