This Article is From Aug 06, 2018

ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்தான வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35 ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது

ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்தான வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Srinagar:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் ’35 ஏ பிரிவு’ குறித்தான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தை பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருகின்றன.

35 ஏ பிரிவுக்கு எதிராக பல பொது நல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையிலும், சில இடங்களில் கல் எறியும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் யாரும் காயமடையவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் முக்கிய கட்சிகளான தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சி மற்றும் பிடிபி கட்சிகளும் 35 ஏ பிரிவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக பேரணிகளை நடத்தின.

இது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹுபுபா முஃப்டி, ‘மாநிலத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் அரசியல் வித்தியாசங்களை மீறி ஒன்றிணைந்துள்ளன. 35 ஏ பிரிவை சட்ட சாசனத்தில் இருந்து நீக்கினால் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35 ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம், ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் மற்ற அனைத்துக் கட்சிகளும் 35 ஏ பிரிவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அம்மாநில பாஜக மட்டும், கருத்து வேறுபாடு கொண்டுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் சேத்தி, ’35 ஏ பிரிவு குறித்து யாரிடம் வேண்டுமானாலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். கடந்த 70 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து பல கோடி ரூபாய் முதலீடு ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், இங்கு அதற்கான வளர்ச்சி வரவில்லை. யாரும் இங்கு முதலீடு செய்வதில்லை. அதனால் வளர்ச்சியே இல்லை. மேலும், இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று கருத்து கூறியுள்ளார்.

.