வெளிநாடுகளில் இருந்து கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பரிதவிப்பு
- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்
- தமிழர்களை மீட்க அதிக விமானங்களை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை
Chennai: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 லட்சம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக உலகம் முழுவதும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், வெளிநாடுகளில் வேலையிழந்து தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை 2 மாதங்களுக்கு முன்பாக தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.
கேரளாவில் மட்டும் 94,085 பேர் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் அதிகமானோரை உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத், ஆந்திரா உள்ளிட்டவை கொண்டுள்ளன.
துபாயில் இருந்துதான் அதிகபட்சமாக 57,305 இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக குவைத், கத்தார், ஓமன், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நில எல்லை வழியாக நேபாளத்திலிருந்து 91,193 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் 4வது கட்டமாக 218 விமானங்கள் வெளிநாடுகளுக்கு புறப்படத் தயாராக உள்ளன. அவற்றில் 25 விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு போதுமான விமானங்கள் இயக்கப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது.
வெளிநாடுகளில் சுமார் 25 ஆயிரத்து 939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த வகைக்காக குறைந்தது 146 விமானங்கள் தேவைப்படும் என மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)