This Article is From Nov 27, 2018

‘திமுக கூட்டணியில் குழப்பமா..?’ - ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்

‘திமுக கூட்டணியில் குழப்பமா..?’ - ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

திமுக-வுடன் தோழமையாக இருக்கும் கட்சிகள் சிலவற்றுக்குள் கருத்து வேறுபாடு வந்துள்ளதாகவும், அதனால் அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.

திமுக பொருளாளாரான துரை முருகனிடம் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘வைகோ அதிமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளாரே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரை முருகன், ‘திமுக கூட்டணியில் மதிமுக இல்லை. எனவே, அது குறித்து நான் கருத்து கூற முடியாது' என்று பதிலளித்துவிட்டார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையில் மீண்டும் பிளவு விழுந்துவிட்டது என்று தமிழக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது.

வைகோவோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, துரை முருகன் கருத்து குறித்து இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில் துரைமுருகனின் கருத்து குறித்து வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு, ‘திமுக கூட்டணியில் மதிமுக இல்லையென்று அவர் சொன்னது மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது. எனக்கு மட்டுமல்ல, எங்கள் தொண்டர்களுக்கும் அந்தக் கருத்து மன வேதனையைக் கொடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தெளிவுபடுத்த வேண்டும். அவர் பதில் சொல்லட்டும். இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து நான் பேச விரும்பவில்லை' என்று கூறினார்.

இது குறித்து நேற்று பேசிய திருமாவளவன், ‘திமுக-வுடன் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் கட்சிகள் இணக்கமாக உள்ளன. துரை முருகன் கருத்து எதேச்சையானது. அதில் எந்த தவறும் இல்லை. தோழமையாக இருக்கும் கட்சிகள் கூட்டணியாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே துரை முருகன் அவ்வாளு சொன்னார். தோழமை, கூட்டணியாக மாற வேண்டும் என்பது தான் எனது கருத்தும். திமுக தலைமையில், மாபெரும் மதச்சார்பற்ற அணி உருவாக வேண்டும். திமுக தலைமையில் கூட்டணி அமையக் கூடாது என்று பலர் மனப்பால் குடிக்கிறார்கள். அந்தக் கனவு நனவாகாது' என்று விளக்கினார். இந்நிலையில் அவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உரையாடி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

.