விசிக - திமுக இடையே, அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது
ஹைலைட்ஸ்
- திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது
- காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக
- தற்போது விசிக-வுக்கும் தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விசிக- திமுக மூத்த நிர்வாகிகள் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
திமுக-வுடன் தோழமையாக இருக்கும் விசிக, இந்த முறை மக்களவைத் தேர்தலில் கடலூர், சிதம்பரம், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு அக்கட்சியிடம் கோரிக்கை வைத்திருந்தது. குறிப்பாக நான்கில் இரண்டு தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று விசிக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் 22 ஆம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுக, விசிக-வுக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்க முடியும் என்றும், அந்தத் தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் கோரியது.
இதை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் 2 தொகுதிகள் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, விசிக-வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக நேற்று அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அது நடக்காமல் போனது.
இதையடுத்து இன்று விசிக-வுக்கு திமுக அழைப்பு விடுத்தது. விசிக - திமுக இடையே, அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் விசிக-வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்க திமுக சம்மதித்துள்ளது. இது குறித்த உடன்படிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.