This Article is From Apr 11, 2019

காவிரிப்படுகையில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகளா!?- வேதாந்தா, ஓஎன்ஜிசி-யின் அடுத்த மூவ்!

காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் எனத் தகவல்

Advertisement
தமிழ்நாடு Written by

இது குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ சுற்றுச்சூழல் அமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறையின்  நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்' சுற்றுச்சூழல் அமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பூவுலகின் நண்பர்கள் அறிக்கையில், “காவிரிப்படுகையில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடல்பகுதி  சேர்த்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் தலா இரண்டு மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமத்தை  மத்திய பெட்ரோலியத்துறை கடந்த ஆண்டு வழங்கியிருந்தது.

நெடுவாசல் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்த சூழலில் மத்திய அரசு சில காலத்திற்கு அமைதி காத்து வந்தது. தற்போது #OALP Open Acrege Licensing Policy மூலம் மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை துவக்கியுள்ளது. இம்முறை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. 

Advertisement

அதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறையின்  நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளது.  வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளையும் , ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளையும் அமைக்கிறது. இதில் ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய  இடங்களில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் இந்த கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர், வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன், திண்டிவன்ம், வானூர், காரைக்கால், புவனகிரி, பெரியகுடி ஆகிய இடங்களில் இந்த கிணறுகள் அமைவதற்காந திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல அரசியல், விவசாய, சுற்றுச்சூழல்  அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் தமிழக அரசு இத்திட்டங்கள் எளிதில் வருவதற்கு ஏதுவாக கடந்த ஆண்டே  மத்திய அரசு விதியில் மாற்றம் கொண்டு வரும் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் இந்தியச் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து 9.10.2018 அன்று ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் உள்ள 13 கோரிக்கைகளில் 10-வது கோரிக்கை அதிர்ச்சியைத் தரும் வகையில் இருந்தது.

Advertisement

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களின் கருத்துக் கேட்பு இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாக பொய்த்து வரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் முயன்று வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.

Advertisement

காவிரி டெல்டா பகுதியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால்  அப்பகுதியில் நில அமைப்பே கடல் மேற்பரப்பு மட்டத்திற்கு கீழே இறங்கி வருவதாகவும்  இதன் காரணமாக நிலப்பகுதியில் கடல் நீர் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு  உட்புகுந்து விட்டதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிவரும் நிலையில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து இம்முயற்சியை தடுக்காவிட்டால் காவேரி டெல்டா அழிவதை நம் தலைமுறை அல்ல நம் கண்முன்னே காணும் நிலை உருவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Advertisement