This Article is From Apr 12, 2019

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா மனு தள்ளுபடி!

பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement
தமிழ்நாடு Written by

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் அனுமதி கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரதான வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆலையில் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை அந்நிறுவனம் அணுகியது. ஸ்டெர்லைட் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்தது.

Advertisement

வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், ஆலையில் உள்ள எந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என வேதாந்தா குழுமம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement