தமிழக அரசு, ‘பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
Chennai: தூத்துக்குடியில் உள்ள, வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைடை ஆலையை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு மூடியிருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைடை ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்துக்குள் ஆலையைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தீர்ப்பில் தீர்ப்பாயம், ‘அடுத்து வரும் 3 ஆண்டுகளில், ஸ்டெர்லைட் நிறுவனம், தூத்துக்குடியில் நலத் திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். தண்ணீர் சப்ளை, மருத்துவமனை, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ச்சித் திட்டங்களில் இந்த முதலீடு இருக்கலாம்' என்று கூறியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22, 23 ஆம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, ‘பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளது.