This Article is From Mar 19, 2020

சிறிய கடைகளைத் திறந்திருக்கத் தடையில்லை: சென்னை மாநகராட்சி

சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்தாது.

சிறிய கடைகளைத் திறந்திருக்கத் தடையில்லை: சென்னை மாநகராட்சி

இக்கட்டான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுவோம் - சென்னை மாநகராட்சி ஆணையர்

ஹைலைட்ஸ்

  • சிறிய கடைகளை திறந்திருக்க தடையில்லை: சென்னை மாநகராட்சி
  • வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
  • நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே.

கொரோனா முன்னெச்சரிக்கையாகப் பெரிய வணிக நிறுவனங்களை மட்டுமே மூட உத்தரவிடப்பட்டுள்ளது, சிறிய கடைகளுக்கு அல்ல என்றும் இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மார்ச்.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் மார்ச் 31-ம்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகச் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய வணிகக் கடைகளை மூட பெருநகர சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  

இதுதொடர்பாக நேற்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன் எனவும் கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு எடுத்துள்ள வருமுன் காப்போம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது என்று பாராட்டு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இது போன்ற சூழ்நிலையைப் பயன்படுத்தி மளிகை, உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளை அடைப்பதும், அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதும் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், “சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்தாது.

நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் நடவடிக்கை அல்ல. தயவுசெய்து இந்த விவரத்தைத் தெளிவாக அனைவரிடமும் கொண்டுசென்று வீண் வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும்.

இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபர்கள் குற்றமிழைத்தவர்களாகக் கருதி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

.