பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சாஜ்ஜத் பாத் இணைந்துள்ளார்.
New Delhi: புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட காரின் உரிமையாளர் யார் என்று தேசிய புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதோடு பயங்கரவாதத்துக்கும் பயங்கர வாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஐநா பாதுகாப்பு சபையும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது
இந்நிலையில், முக்கிய தகவலாக பயங்கரவாதி பயன்படுத்திய கார் மாருதி இகோ என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜலில் அகமத் ஹகானி வாங்கியுள்ளார். இதனையடுத்து 7 பேருக்கு கைமாறியுள்ளது. இக்கார் கடைசியாக பிப்ரவரி 4-ம் தேதி சாஜ்ஜத் பாத் வசம் வந்துள்ளது.
இதனையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு, உள்ளூர் போலீஸ் உதவியுடன் சாஜ்ஜத் பாத் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர். அவர் அங்கு இல்லை. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சாஜ்ஜத் பாத் இணைந்துள்ளார் என்றும் தேசிய புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சாஜ்ஜத் பாத் முகநூலில் தனது கையில் ஆயுதங்களுடனாக இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.