This Article is From Apr 08, 2019

வேலூரில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலூரில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேலூரில் பிடிபட்ட பணம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

பணத்தின் மூலம் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் என்பது காப்பாற்றப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒரு திமுக வேட்பாளர் தவறு செய்கிறார் என்பதற்காக தேர்தல் நிற்பதற்கு வாய்ப்பளிக்காமல், சட்டத்தை ஆராய்ந்து சம்மந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமானவர்களின் இடங்களில் தான் அந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு திமுக வேட்பாளர் தான் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்வது தான் சரியாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக வீட்டை துடைத்து வைத்துவிட்டார் சிதம்பரம் அதனால், ரெய்டுக்கு வாங்க, வாங்க என்கிறார். வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வாங்க நினைத்தவர்களுக்கு பேரிடி. எதிர்கட்சியினருக்கு தற்போது வாக்குகள் கேட்பது என்பதை விட பண மூட்டையை தூக்கிட்டு ஊர் ஊராக தப்பித்து செல்வதே பெரும் வேலையாக இருக்கிறது.

மத விவகாரங்களை யாரும் தொடக்கூடாது என்றும், அதற்காக ஏட்டிக்குப் போட்டியாக பெரியார் சிலையை உடைப்பது தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.

.