This Article is From Apr 16, 2019

வேலூர் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது.

வேலூர் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஏப்.18ம்) தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் மே 23ல் அறிவிக்கப்பட உள்ளது.

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இதற்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு வந்த தகவலை தொடர்ந்து, வேலூரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, துரைமுருகன் ஆதரவாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, துரைமுருகன் ஆதரவாளரது சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பதுக்கி வைக்கப்பட்ட பணம் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது.

ஆனால், இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணைய செய்தித்தொடர்பாளர் ஷெய்பாலி சரண் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் குறித்து எந்த பரிந்துரையும் வருமானவரித்துறை ஒருபோதும் செய்யாது.

வேலூரில் சோதனை நடத்தியது குறித்து இதுவரை 5 முறை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளோம். எனவே, தேர்தல் ஆணையம் மட்டுமே இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்கும், என்று வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.

.