வேலூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன.
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரை முருகனின் மகனான கதிர் ஆனந்த் அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்திருக்கிறார். 33 வயதில் அரசியலுக்கு வந்த கதிர் ஆனந்துக்கு தற்போது 44 வயது ஆகிறது. இந்த தேர்தலில் அவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
திமுக உறுப்பினர் என்பதை தவிர, நேரடி அரசியலில் கதிர் குதிக்கவில்லை. தற்போதுதான் தேர்தலில் நின்று எம்.பியாகி உள்ளார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பொறுப்பையும் கதிர் ஆனந்த் வகிக்கிறார்.
மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியிடுவதற்காக கடந்த ஜூலை 17-ம்தேதி கதிர் ஆனந்த் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது மாற்று வேட்பாளராக அவரது மனைவி சங்கீதாவின் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கணவருக்காக அவர் இந்த தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு என அந்தந்த மொழி பேசும் மக்களிடம் அதே மொழியில் சங்கீதா பேசி வாக்கு சேகரித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. இதில் எதிர்பார்த்தவாறே அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் கதிர் ஆனந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இறுதியில் 9,018 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.