வாக்குகள் 9-ம்தேதி வெள்ளியன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் 11ம் தேதி தொடங்கி கடந்த 18ம் தேதி முடிவடைந்தது.
இதில் திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 2 ஆயிரத்து 99 வி.வி.பேட் இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. தேர்தலில் மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்குகள் 9-ம் தேதி வெள்ளியன்று எண்ணப்படுகின்றன.