This Article is From Jul 30, 2018

‘விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்!’- வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊட்டச்சத்துக்கான விவசாய முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது

‘விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்!’- வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊட்டச்சத்துக்கான விவசாய முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சுவாமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் துவக்க உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் பேசியதாவது, ‘விவசாய முறை என்பது நல்ல வேளாண் நடைமுறைகளால் ஆதரிக்கப்பட வேண்டும். நிலத்திலுள்ள மண் மூலம் நல்ல பயிர்களை விளைவிக்க முடியும். நல்ல பயிர்களின் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். பசுமை புரட்சி கலோரி குறைபாடுகளை கவனத்தில் கொண்டிருந்தது. செயல் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக அது சாத்தியமானது. நீர்ப்பற்றாக்குறை சம்பந்தமான பிரச்சனைகளோடு புரதச்சத்து, நூண்ணூட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

k1al96g8

இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு தன் உரையில் குறிப்பிட்டதாவது, ‘ஐ.நா-வின் 2018-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்கு ஜூன் 20, 2018-ல் வெளியிட்ட அறிக்கையின்படி உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் முதன்முறையாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கிறது. உலகில் பசி எண்ணிக்கை அதிகரிப்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். இந்தியாவில் ஊட்டச்சத்தின்மை நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. எனினும் அது கொள்கை விவாதங்களின் போது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எனவே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயத்தை ஊட்டச்சத்துடன் இணைப்பதற்கான கருத்தைக் கொண்டுவர இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைவதில் இந்திய அரசு அக்கறையுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். செப்டம்பர் 2017-ல் தேசிய ஊட்டச்சத்து திட்டமுறை இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்னெடுத்ததை இந்திய அரசு பின்பற்றி ஊட்டச்சத்தில்லா சமுதாயத்தை உருவாக்க முனைந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.

நமது விவசாயக் கொள்கைக்கு அவசியமான தேவையாக விவசாயத்தை ஊட்டச்சத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். இன்று உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பிலும் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். அதே மாதிரி இந்த உணவு உற்பத்தியில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் நாம் பெற முடியும். ஊட்டச்சத்து சாகுபடியில் முக்கியமான பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு உற்பத்தியை மேம்படுத்துவதில் மட்டுமல்லாமல் மண்ணிற்கு ஊட்டச்சத்து மதிப்புகளை மீட்டெடுப்பதற்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த பயிர்களை ஊக்குவிப்பதுடன், அத்தகைய பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவது அவசியம். பொதுவிநியோக அமைப்புகளின் மூலம் அவற்றை வழங்குவது நல்லது’ என்று கூறினார்.

.