Chennai: திமுக தலைவர் கருணாநிதியின் தற்போதைய உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தொடர் சிகிச்சையால், அவரது உடல் நலம் சீராகி வருகிறது. மருத்துவக் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இந்நிலையில் அவர், இம்மாதம் 18-ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியஸ்டமி கருவி நீக்கப்பட்டு பதிய கருவி பொருத்தப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே வீடு திரும்பினார். மீண்டும், சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், ‘சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர்.
ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. அதனால், அவர் மீண்டும் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒரு நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழு சிகிச்சை கொடுத்து தீவிர கண்காணிப்பில் வைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று கருணாநிதியைக் காண துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகிய முக்கியப் புள்ளிகள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் கருணாநிதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது. மேலும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும், கோயம்பத்தூருக்கு சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு திரும்பி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.