ஹைலைட்ஸ்
- கடந்த செப்டம்பரில் 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்
- சீக்கிரமே 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது
சசிகலா ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். ஒரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்றும், மற்றொருவர் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது
அதிமுக-வைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் சென்ற ஆண்டு, முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஜெயலலிதா இறந்த பின்னர் அ.தி.மு.க சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என்று இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, சசிகலா அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர்.
முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான இந்திரா பானர்ஜி, 'சபாநாயகர் தனபால், 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கி அறிவித்த உத்தரவு செல்லும். சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.