டிசம்பர் 14 ஆம் தேதி, அமமுக-வின் அமைப்புச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தார். அமமுக-வை வலுவிழக்கச் செய்ய திமுக போட்ட ப்ளானின் ஒரு பகுதிதான் இது என்றும், அவர் இன்னும் அமமுக-வின் ஸ்லீப்பர் செல்தான் என இன்னொரு புறமும் தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
14 ஆம் தேதி காலை முதலே பரபரப்புடன் காணப்பட்ட, திமுக-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், 10 மணிக்கு தொண்டர்கள் திரண்டதால் அலை மோதியது. 10:30 மணி அளவில் சரவெடி… அரை மணி நேரம் கழித்தே வெடி சத்தம் அடங்கியது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயத்துக்குள் சென்றார். திமுக-வின் அடிப்படை உறுப்பினர் அட்டையை ஸ்டாலினிடமிருந்தே பெற்றுக் கொண்டார்.
அறிவாலயத்திலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் பேட்டியில் கவனிக்கத்தக்க வகையில் இரண்டு விஷயங்கள் இருந்தன, ஜெயலலிதாவை, அவர் ‘மாண்புமிகு அம்மா' என்று தான் கூறினார். டிடிவி தினகரன் பெயரை அவர் ஒரு முறை கூட உச்சரிக்கவோ, அவரை விமர்சிக்கவோ இல்லை. இதனால், செந்தில் பாலாஜிக்கு, அதிமுக மீதிருக்கும் கரிசனம் இன்னும் குறையவில்லை என்று சொல்லப்பட்டது.
இது குறித்தும், அமமுக-வின் முகாமில் தற்போது எப்படிப்பட்ட சூழல் நிலவி வருகிறது என்பது பற்றியும், தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவரான வெற்றிவேலிடம் கேட்டோம். “முதலில், செந்தில் பாலாஜி என்பது ஒரு நபர். ஒரேயொருவர் கட்சியைவிட்டு விலகினால், அந்தக் கட்சி பலவீனப்பட்டு விடுமா?” என்று ஆரம்பித்தார்.
“அப்படிப் பார்த்தால், பண்ருட்டி ராமச்சந்திரன், அம்மாவை விட்டு விலகினார். நாவலர், திமுக-வை விட்டு விலகினார். அவர்களெல்லாம் கட்சியில் பெரிய தலைகளாகத் தான் இருந்தனர். அவர்கள் விலகிய ஒரே காரணத்திற்காக, கட்சி பலகீனப்பட்டு விட்டதா. கட்சி என்பது யார் சென்றாலும் இருக்கும். கட்சி என்பது தலைமையினாலும், தலைமையின் ஆளுமைத் திறனாலும் இருப்பது.
ஆகவே, செந்தில் பாலாஜி என்கின்ற ஒற்றை நபர் சென்று விட்டதால், கட்சியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாளைக்கு, நானே அமமுக-விலிருந்து விலகினாலும், அதற்கு ஒன்றும் ஆகாது” என்றார்.
“இடைத் தேர்தலில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சித் தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே” என்றதற்கு, “இடைத் தேர்தலில் அவர் திமுக-வுக்குக் கீழே நின்றால் மட்டும், ஜெயித்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா..? இவ்வளவு நாள் யாரை எதிர்த்து அவர் போட்டியிட்டாரோ, அவர்களுடனேயே கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அவர்களும் இவரும் எப்படி இணக்கமாக செயல்படுவார்கள். எந்தத் தொகுதியில் செந்தில் பாலாஜி நின்றாலும் அவர் தோற்பது உறுதி” என்றார் விளக்கமாக.
“நாங்கள் கட்சியை பலப்படுத்தி, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் விஷயத்தில் கட்சி தெளிவாக முடிவெடுத்துள்ளது. இனி, மேல்முறையீடு கிடையாது. மக்களிடத்தில் தான் முறையிட உள்ளோம்” என்றார் நிறைவாக.