வி.ஜி.சித்தார்த்தார, முன்னாள் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.
Bengaluru: காஃபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த் மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சித்தார்த்தா கடைசியாக மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் தனது காரில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, 1 கி.மீ நீளமுள்ள அந்த ஆற்று பாலத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சில போலீசார் மிதவை படகுகள் மூலம் ஆற்றில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சித்தார்த்தாவின் ஓட்டுநர் கூறிய தகவலின் படி, சித்தார்த் நேத்ராவதி ஆற்று பாலத்தில் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி நடந்து சென்றுள்ளார். ஓட்டுநரை காத்திருக்குமாறு கூறி சென்ற அவர், 1 மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பிவரவில்லை. இதையடுத்து, பதற்றமடைந்த ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சித்தார்தாவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் பிஎல் சங்கர் ஆகியோர், பெங்களூருவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், பல தலைவர்களும், ஆதரவாளர்களும் அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.
கடந்த 2017 செப்டம்பர் மாதம் சித்தார்த்தாவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரது குடும்பம் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக காஃபி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய காஃபி பீன் ஏற்றுமதியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
மாயமான விஜி சித்தார்த்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜி சித்தார்த்தின் தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்தவர், எனது நண்பர் சித்தார்தா. அவர் நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. சித்தார்தா ஆற்றுப்பாலத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கலாம், அல்லது வேறு காரில் ஏறி சென்றிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் காதர் தெரிவித்துள்ளார்.