கமலா ஹாரிஸுக்கு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் ஆதரவு குவிந்து வருகின்றது.
ஹைலைட்ஸ்
- கலிபோர்னியாவின் செனட்டராக உள்ளார் கமலா ஹாரிஸ்
- ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் கமலா
- அந்தக் கட்சி சார்பில் துணை அதிபராக அவர் போட்டியிட உள்ளார்
Washington: அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். கமலாவின் தாயான ஷ்யாமலா, சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமலாவின் சொந்த ஊரான தமிழகத்தின் துளசேந்திரபுரத்தில், அவருக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனரும் அது குறித்தான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவர் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸை சில நாட்களுக்கு முன்னர் தேர்ந்தெடுத்தார். அதிலிருந்து அவருக்கு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் ஆதரவு குவிந்து வருகின்றது.
கமலாவின் தாயான ஷ்யாமலா கோபாலன் சென்னையிலிருந்து மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் ஜமைக்காவைப் பூர்விகமாகக் கொண்ட கருப்பின ஆணைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் பிறந்த பெண்தான் கமலா ஹாரிஸ்.
ஷ்யமாலாவின் தந்தையான பி.வி.கோபாலன், இந்தியக் குடிமைப் பணி செய்தவர். அவரின் சொந்த ஊர்தான் துளசேந்திரபுரம் எனப்படுகிறது. அங்குதான் கமலாவுக்கு ஆதரவாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர் குறித்தப் படத்தை கமலாவின் சகோதரியின் மகளான மீனா ஹாரிஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “இந்தியாவின் தமிழகத்திலிருந்து இந்தப் படம் எனக்கு அனுப்பப்பட்டது. பி.வி.கோபாலனின் பேத்தி வெற்றி பெற வாழ்த்துகள் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு நாங்கள் செல்லும்போது எங்கள் கொள்ளு தாத்தா பற்றி அறிந்து கொண்டோம். எங்கள் பாட்டியின் வாழ்க்கையில் மிகப் பெரும் பங்காற்றியவர் அவர். அவர்கள் இருவரும் இப்போது எங்கள் நிலையைப் பார்த்து மகிழ்வார்கள்” என உருக்கமான பதிவை இட்டிருந்தார்.
கமலா ஹாரிஸும் தன் தாத்தா பற்றிய நினைவலைகளை சில நாட்களுக்கு முன்னர் பகிரும்போது, “மெட்ராஸில் என் தாத்தாவுடன் மிக நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அப்போது அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் பற்றி எனக்கு நிறைய கதைகள் சொல்வார். தினமும் கதை முடிந்த இடத்திலிருந்து அடுத்த நாள் நடையை ஆரம்பிக்கும்போது சொல்ல ஆரம்பிப்பார். இன்று நான் இருக்கும் நிலைக்கு அவரும் முக்கிய காரணம்” என நெகிழ்ந்தார்.