This Article is From Dec 08, 2018

நாகையில் அமைச்சரை அரிவாளுடன் துரத்திய இளைஞர்… பரபரப்பு வீடியோ!

தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது. ஆனால், இதுவரை 350 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சம்பவத்தை அடுத்து இரு சக்கர வாகனத்தில் எஸ்கேப் ஆனார்

Chennai:

நாகப்பட்டினத்தில் சில நாட்களுக்கு முன்னர், கஜா நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை, இளைஞர் ஒருவர் அரிவாளுடன் துரத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் அரிவாளுடன் அமைச்சரின் காரைத் துரத்தும் நபரின் பெயர் ராஜா என்று பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து, காருடன் தப்பித்துச் சென்ற அமைச்சர் மணியன், தனது பாதுகாவலருடன் பைக்கில் எஸ்கேப் ஆனார்.

இது குறித்து போலீஸ் தரப்பு, ‘இந்த சம்பவம் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி நடந்தது. நாகையின் விழுந்தாமண்டியில் கஜா நிவாரணப் பணிகளை அமைச்சர் பார்வையிட சென்ற போது இப்படி நடந்துள்ளது. இது குறித்து 6 பேரை நாங்கள் கைது செய்து விசாரித்து வருகிறோம். 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அரிவாளுடன் அமைச்சரைத் துரத்திய நபர், கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளார். அவரை கூடிய சீக்கிரம் கண்டிப்பாக பிடிப்போம்' என்று கூறியுள்ளது.

கஜா புயல் தாக்கி, இரண்டு நாட்களுக்குப் பிறகும் அரசு தரப்பிலிருந்து எந்த வித நிவாரண உதவியும் வராததை அடுத்து, விழுந்தாமண்டி மக்கள் கொதிப்பில் இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் அமைச்சர் மணியன், அங்கு வந்தது மக்களை மேலும் எரிச்சலூட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத் தான் அரிவாளுடன் துரத்தும் சம்பவம் நடந்துள்ளது.

சென்ற மாதம் தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலால், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. 110 கிலோ மீட்டர் வேக்கத்தில் புயல் காற்று வீசியதால், 11 லட்சம் மரங்கள், 3 லட்சத்துக்கும் மேலான வீடுகள் சேதமடைந்தன. அதேபோல நூற்றுக்கணக்கான படகுகளும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்களும் பாதிக்குப்புக்கு உள்ளாகின.

இதற்கு தமிழக அரசு, மத்திய அரசிடம் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது. ஆனால், இதுவரை 350 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

.