This Article is From Feb 07, 2020

ஐடி வலையில் விஜய்: ரஜினியோடு ஒப்பிட்டு ஒரு பன்ச்; சீமானின் ஆதரவுக் குரல்!!

Vijay IT Raid Row: “தமிழகத்தில் விஜய்யைவிட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்"

ஐடி வலையில் விஜய்: ரஜினியோடு ஒப்பிட்டு ஒரு பன்ச்; சீமானின் ஆதரவுக் குரல்!!

Vijay IT Raid Row: "ரஜினியை நல்லவர் போலவும் விஜய்யை கேட்டவர் போலவும் காட்டும் சதி நடக்கிறது"

Vijay IT Raid Row: நடிகர் விஜயின் சாலிகிராமம் மற்றும் பனையூர் வீட்டில் 23 மணிநேரமாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை நேற்று மாலை நிறைவுபெற்றது. இந்த சோதனையின்போது விஜயின் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய்யிடமும் கடந்த 2 நாட்களாக பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மொத்த சம்பவத்தில் விஜய்யின் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் நடத்தப்பட்ட விதத்தால் மிகவும் கொதிப்பில் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான், “தமிழகத்தில் விஜய்யைவிட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யாரென்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால், விஜய் மீது ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. அவரைப் பார்த்து இவர்களுக்கு பயம். அதனால்தான், அவரை மிரட்டிப் பார்க்கிறார்கள். கந்துவட்டிப் பிரச்னையில் ரஜினி சிக்கிய பின்னரும், வரி பாக்கிப் பிரச்னையில் அவர் சிக்கிய பின்னரும், அது குறித்துப் பேசப்படாதது ஏன். ரஜினியை நல்லவர் போலவும் விஜய்யை கேட்டவர் போலவும் காட்டும் சதி நடக்கிறது,” எனக் கொதித்துள்ளார். 

கடந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த ‘பிகில்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதில் தயாரிப்பாளர் தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

முதலில் நேற்று முன்தினம் நெய்வேலியில் நடைபெற்ற ‘மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு விஜய்க்கு சம்மன் அளித்தனர்.

இதையடுத்து விஜய் சென்னைக்கு வந்ததுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதேபோன்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தப்பட்டன. 

மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி கைப்பற்றப்பட்டது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரூ. 300 கோடி வரையில் வருமானம் மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
 

.