நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
New Delhi: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்றுள்ளார். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். எனவே, மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
லண்டனில் உள்ள அவரை இந்தியாவிற்கு அழைத்து வர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.
இன்று இந்த வழக்கு விசாரணை நடைப்பெற்ற நிலையில், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறினார். “என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், நீதிமன்றம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மல்லையாவின் பேட்டி வெளியானதும் அருண் ஜெட்லி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “2014-ம் ஆண்டிலிருந்து என்னை சந்திக்க அனுமதியே அளிக்கவில்லை. அனுமதி அளிக்காத நிலையில் அவரை சந்தித்தேன் என்ற கேள்விக்கே இடம் கிடையாது,” என்று ஜெட்லி கூறியுள்ளார். விஜய் மல்லையாவின் பேட்டியை தொடர்ந்து காங்கிரஸ், பிற கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.