ஹைலைட்ஸ்
- தற்போது இங்கிலாந்தி தஞ்சம் அடைந்துள்ளார் மல்லையா
- அங்கிருந்து குற்றச்சாட்டுகளுக்கு வாதாடி வருகிறார் மல்லையா
- அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது சிபிஐ
Mumbai: விஜய் மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, தேசிய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப கொடுக்கமல் இருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது சிபிஐ வழக்குத் தொடுத்தது. ஆனால், கைது செய்யும் முன்னரே இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார் மல்லையா. தொடர்ந்து அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசும் சிபிஐ அதிகாரிகளும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அவர் தொடர்ந்து இங்கிலாந்தில் இது தொடர்பான வழக்கில் வாதாடி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு அன்றே பிணையில் வெளி வந்தது குறிப்பிடத்தக்குது. தொடர்ந்து அவர் பிணையில் தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய அமலாக்கத் துறை அவர் மீது புதிய குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப் பத்திரிகையில், ‘வங்கிகளிடம் அவர் பெற்ற 3,700 கோடி ரூபாய் கடனை எஃப் 1 மோட்டார் விளையாட்டு அணிக்கும், டி20 ஐபிஎல் அணிக்கும், சொந்த காரணங்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளார். கடந்த மே மாதம் 15 ஆம் தேதியுடன் எஸ்பிஐ வங்கியிடம் வாங்கிய கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து அவர் செலுத்த வேண்டிய தொகை 9,990.07 கோடி ரூபாய் ஆகும். இந்தக் கடன்களைப் பெற அவர் பிணையாக வைத்த ஆவணங்கள் போலியானவை. இது அவருக்குத் தெரிந்தும் தொடர்ந்து கடன் பெற்று வந்துள்ளார். இந்தக் கடன்களைப் பெற்று கூறப்பட்ட விஷயத்திற்கு பயன்படுத்தாமல் தனது சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியுள்ளார்’ என்று கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளது.
அந்த குற்றப் பத்திரிகையில் மேலும், ‘பிணையாக வைத்து கடன் பெற்ற பல நிறுவனங்களுக்கு மல்லையா தான் தலைவராக இருந்திருக்கிறார். அந்த நிறுவனங்களில் இயக்குநர்களா இருந்தவர்கள், மல்லையாவுக்குத் தான் விஸ்வாசமாக இருந்துள்ளனர். இந்த நிறுவனங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த வித நடவடிக்கைகளோ வருவாயோ இல்லை’ என்று விளக்கியுள்ளது.
இந்த குற்றப் பத்திரிகையில் மூலம், மல்லையா தான் பெற்றக் கடன் போலி ஆவணங்களை வைத்து என்றும், அது சொன்ன காரணங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றப் பத்திரிகை சீக்கிரமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.