மனு தள்ளுபடியானது மல்லையாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஹைலைட்ஸ்
- இந்தியாவுக்கு கொண்டுவருவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மனு தள்ளுபடி
- 14 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அவகாசம்
- உச்ச நீதிமன்றம் செல்ல தவறினால் இந்தியா கொண்டுவரும் நடவடிக்கை தொடங்கும்
London: கடன் மோசடி வழக்கில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார் விஜய் மல்லையா. கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் பண மோசடியில் மல்லையா ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தப்பியோடிய மல்லையா, தற்போது இங்கிலாந்தில்தான் வசித்து வருகிறார். அங்கிருந்தபடியே தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் மூலம் சந்தித்து வருகிறார் மல்லையா.
அவரை நாட்டுக்கு அழைத்து வர அமலாக்கத் துறை தொடர்ந்து முயன்று வருகிறது. தன் மீது மத்திய அரசு சுமத்தியுள்ள குற்றச்சாடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மல்லையா தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்த அந்த வழக்கை, இந்த மாத இறுதிக்கு ஒத்திவைத்திருந்தது நீதிமன்றம்.
இந்த நிலையில், விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஸ்டீபன் இர்வீன், எலிசபெத் லேங் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் 'விஜய் மல்லையாவுக்கு எதிராக இந்தியாவின் சிபிஐ, அமலாக்கத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக இதுதொடர்பான வழக்கை இங்குள்ள மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். இதில், இந்திய அமைப்புகள் கூறியுள்ள குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது ' என்று தெரிவித்து, மல்லையாவின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.
உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து பிரிட்டனில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா 14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதனை செய்யத் தவறினால், அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய விசாரணை அமைப்புகள் தொடங்கி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் மல்லையா, இந்தியாவிலிருந்து தப்பியோடினார். தற்போது மல்லையாவுக்கு 63 வயதாகிறது.