திருடன் என்ற பட்டத்தை தவிர்க்க விரும்புவதாக மல்லையா கூறியுள்ளார்.
New Delhi: வெளிநாடு தப்பிச் சென்றிருக்கும் விஜய் மல்லையா தான் வாங்கிய கடனை திருப்பி அளிப்பதாக கூறும் வாக்குறுதிக்கும் தன்மீதான வழக்கிற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார். திருடன் என்று தன்னை அழைப்பதை நிறுத்துவதற்கு தான் விரும்புவதாகவும் மல்லையா ட்விட்டரில் குமுறி இருக்கிறார்.
இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கடனை பெற்று விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்திற்கு தப்பிச் சென்று விட்டார். அவர் மோசடி செய்த தொகை ரூ. 9 ஆயிரம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தப்பிச்சென்ற அவரை இந்தியா கொண்டு வருவதற்காக மத்திய அரசு 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் வரும் 10-ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் வங்கிகளில் தான் பெற்ற கடனை 100 சதவீதம் அடைத்து விடுவதாக மல்லையா நேற்று பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இங்கிலாந்தின் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால் தானும் இந்தியா கொண்டு வரப்படுவோம் என்பதை உணர்ந்து மல்லையா இந்த வாக்குறுதியை அளித்ததாக பேசப்படுகிறது. மேலும் இந்தியா கொண்டு வரப்படுவதை தவிர்க்க மல்லையா இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் மேலும் சில தகவல்களை ட்விட் தட்டி மல்லையா குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டில், ''மரியாதைக்குரிய என்னை விமர்சிக்கும் நபர்களே, கடனை திருப்பி அளிப்பதாக கூறும் வாக்குறுதிக்கும், என்னை இந்தியாவுக்கு கொண்டு வரும் வழக்கு விசாரணைக்கும் தொடர்பில்லை. என்னுடைய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் திருடன் என்று அழைக்கப்படுவதை நிறுத்துவதற்கு விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு மல்லையா கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், ஆனால் வங்கி மோசடிக்கு என்னை உதாரணமாக கூறி விளம்பரம் செய்யப்படுவதாகவும், இதனால் இந்திய மக்கள் தன் மீது கடுங்கோபத்தில் உள்ளதாகவும் மல்லையா கூறியிருந்தார்.
அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கில் 10-ம்தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.