London: லண்டன்: இந்தியாவில் உள்ள 13 பொதுத்துறை வங்கிகளிடம் 9,000 கோடி ரூபாய் கடனை விஜய் மல்லையா பெற்றிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த பிரிட்டிஷ் நீதிமன்றம், லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்தியாவில் உள்ள 13 வங்கிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
விஜய் மல்லையா பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனை திரும்பப் பெறும் முயற்சியாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 ஆம் தேதி நீதிபதி பிரையன் வெளியிட்ட அறிக்கையில், “லேடி வாக், குவின் ஹூ லேன், டெவின், வெல்வின், ப்ராம்பிள் லாட்ஜ், ஆகிய இடங்களில் மல்லையாவிற்கு சொந்தமான சொத்துக்களை சோதனை செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கார்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், யூகோ பாங்க், யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜெ.எம் பைனான்சியல் அசெட் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இருக்கும் விஜய் மல்லையாவின் சொத்தை முடக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்தத் தீர்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள விஜய் மல்லையாவின் மனு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.