This Article is From Feb 12, 2020

வைரலான விஜய் சேதுபதியின் ட்வீட்… அப்படி என்னதான் இருந்தது..?

விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா,” என்று கேலி கலந்த தொனியில் பதிவிட்டுள்ளார். 

வைரலான விஜய் சேதுபதியின் ட்வீட்… அப்படி என்னதான் இருந்தது..?

"பிகில் படம் வெளியான போது அனைத்திற்கும் ஆதாரம் கிடைத்துள்ளது"

விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பக்கங்களில், வைரலாக பரவி வரும் போலியான தகவல் பற்றி பகிரப்பட்டிருந்தது. 

அதில், “ஜேப்பியாரின் மகள் ரெஜினா, தமிழகத்தில் கிறித்துவ மதமாற்ற இயக்கம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். 

அடிப்படைவாத கிறித்துவ பாதிரியார்கள் மற்றும் முக்கிய தமிழ் நடிகர்களை வைத்து மத மாற்றத்தை வீரியமாக செய்ய நினைத்துள்ளார். விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மற்றும் சிலர் வடபழனியில் நடந்த மாபெரும் மதமாற்ற நிகழ்ச்சியில் ஏற்கெனவே மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்த நபர்கள் மூலம் சினிமா நடிகர்கள், சினிமா துறையில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த ஊழியர்களை மதமாற்றம் செய்ய, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கிறித்துவ மதத்தை வளர்ப்பதே திட்டம்.

இதற்கான நிதிகள் என்.ஜி.ஓ-க்கள் மூலமே வர வேண்டும். ஆனால் மோடி மற்றும் அமித்ஷா போட்ட ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளால், கல்வி நிறுவனங்கள் மூலம் பணக் கடத்தல் நடந்துள்ளது. 

பிகில் திரைப்படத்தின் மொத்த நிதியும் ரெஜினாவால்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த நிதியைக் கொடுத்தது போல காண்பிக்கப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம், தனது பெயரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த காரணத்திற்காக ஒரு பெரும் தொகையைப் பெற்றுள்ளது. 

இந்தப் படம் மூலம் வந்த மொத்தக் கருப்புப் பணமும் விஜய்க்கும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கும் சென்றுள்ளன. அவர்கள் ரெஜினாவிடம் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளனர். 

இந்த அனைத்தையும் வருமான வரித் துறையும் உள்துறை அமைச்சகமும் கடந்த ஓராண்டாக உன்னிப்பாக பார்த்து வருகின்றன. 

பிகில் படம் வெளியான போது அனைத்திற்கும் ஆதாரம் கிடைத்துள்ளது. 

இதைத் தொடர்ந்துதான் இந்த விவகாரத்தில் சம்பந்தமுடைய அனைத்துத் தரப்பினரிடமும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. பிகில் ரிலீஸ், ஜேப்பியார் அறக்கட்டளை, எஸ்ஆர்எம், லயோலா கல்லூரி அறக்கட்டளை மற்றும் பிற கிறித்துவ கல்வி அறக்கட்டளைகள் மற்றும் சமீபத்தில் மதமாற்றம் செய்யப்பட்ட நடிகர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் பனிக்கட்டியின் நுனி மட்டும்தான். பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இனிதான் வெளிவரும்,” என்று கதைகட்டி விடப்பட்டிருந்தது.

urf4jjto

இதைத்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா,” என்று கேலி கலந்த தொனியில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் வருமான வரித் துறை விசாரணை நடந்தது. அவரது வீட்டிலும் வருமான வரித் துறை ரெய்டு நடத்தப்பட்டது. விஜய் நடித்து ஹிட் அடித்த ‘பிகில்' திரைப்படத்தில் அவர் எவ்வளவு ஊதியம் பெற்றார் மற்றும் சமீபத்தில் அவர் வாங்கிய சொத்துகள் பற்றி இந்த ரெய்டின் போது விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி, விஜய்யுடன் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

.