This Article is From Jun 22, 2019

விஜயகாந்த் மட்டுமல்ல.. இந்தியாவே கடனில் தான் இருக்கிறது: பிரேமலதா

விஜயகாந்த் மட்டுமல்ல, இந்தியாவும், தமிழகமும் கடனில் தான் இருக்கிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், கஷ்டப்பட்டாவது கடனை அடைத்து கல்லூரியை மீட்டு எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த் மட்டுமல்ல.. இந்தியாவே கடனில் தான் இருக்கிறது: பிரேமலதா

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் தங்களது பெயரில் உள்ள வீடு, கல்லூரியை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இதில், ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக அவரது சொத்துக்களை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்றைய நாளிதழ்களில் விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26-ல் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. கடன் பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தேமுதிகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு சினிமாவில் நடித்தார் இப்போது நடிக்க வில்லை. அதைப் போன்று எங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருந்த திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. எங்களுடைய மகன்களில், ஒருவர் இப்போது தான் நடிக்க ஆரம்பித்துள்ளார். இன்னொருவர் இப்போது தான் தொழில் தொடங்கியுள்ளார்.

அதனால் எங்களுக்கு வேறுவழியில் வருமானம் இல்லை. ஆனால் உறுதியாக எப்படியாவது கஷ்டப்பட்டாவது கடனை அடைத்து கல்லூரியை மீட்டு எடுப்போம். அது மட்டுமல்ல வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சவலாக உள்ளது. எப்படி சினிமா உலகம் நலிந்து போய் உள்ளதோ முதல் நாள் வெளியாகும் படங்கள் மாபெரும் வெற்றிப்படம் என்று விளம்பரம் தான் கொடுக்கின்றனர். எல்லா படமும் பிளாப்பு தான்

இதே நிலைமை தான் பொறியியல் கல்லூரிகள், நிறுவனங்கள் நடத்துபவர்களின் நிலைமை உள்ளது. நாங்கள் கடன் வாங்கியது இருக்கட்டும் அதை திருப்பி செலுத்த நேரம் கேட்டோம் அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை இன்னும் அடுத்த ஜூலை 26ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதற்குள் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம். விஜயகாந்த் ஆண்டாள் அழகர் கல்லூரியை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகிறோம். வேறு பணத்தை வைத்து தான் கல்லூரியை நடத்திவருகிறோம்.

கல்லூரியில் இருந்து வரும் வருமானத்தை வைத்து கல்லூரியை நடத்த முடியாத நிலையில் தான் உள்ளது. எப்படி சேவை மனப்பான்மையுடன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதோ அது தொடரும். நேர்மையாக நடந்து கொள்பவர்களுக்கு கடவுள் சோதனை கொடுப்பார். ஆனால் கைவிட மாட்டார். வங்கி நிர்வாகிகள் அவர்கள் கடமையை செய்து இருக்கிறார்கள். சட்டப்படி எப்படி செய்ய வேண்டுமோ செய்து மீண்டு வருவோம் என்று அவர் கூறினார்.

.