Lok Sabha Elections 2019: 'எனக்கு நெயில் பாலிஷ் மாதிரி மை போட்டுவிட்டிருக்காங்க' என வாக்களித்துவிட்டு வந்த விஜய்சேதுபதி தனது கைகளை காட்டி கலகலப்பாக கூறினார்.
மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு
இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18
சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7
மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி
முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இதேபோல், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய்சேதுபதி தனது வாக்கை பதிவு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்முறையாக வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இது ஒரு பெருமையான விஷயம்.
ஏனெனில், 18 வயதில் நம் வீட்டில் ஒரு முடிவு எடுப்பதற்கு நம்மை கேட்பார்களா, இல்லையா என்பது தெரியாது. ஆனால், இந்த நாட்டோட நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முடிவு செய்கிற உரிமையை உங்களிடம் கொடுத்துள்ளனர்.
நானும் ஓட்டு போட்டுவிட்டேன். எல்லோரையும் போல் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும் காத்திருக்கிறேன். இந்த வருடம் அதிகப்படியான வாக்குகள் பதிவாகும் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது, மக்கள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. வாட்ஸ் ஆப், மீம்ஸ் மூலமாக அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.