துபே மீது, கொலை, ஆள் கடத்தல், கலவரம் உள்ளிட்டப் பிரிவுகளில் 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஹைலைட்ஸ்
- உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே
- 8 காவலர்களைக் கொன்ற குற்றச்சாட்டில் அவர் தேடப்பட்டு வந்தார்
- ம.பி-யில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
New Delhi: உத்தர பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 8 காவலர்களை சுற்றி வளைத்த ரவுடிகள், அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே என்று குற்றம் சாட்டப்பட்டது. காவலர்கள் மீது தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து துபேவை கைது செய்ய உத்தர பிரதேச காவல் துறை தீவிரமாக முயன்று வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஜ்ஜைனின் மகாகல் கோயிலில், துபேவைக் கைது செய்த போலீஸார், அவரை வண்டியில் ஏற்ற முற்பட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் துபே, “நான் விகாஸ் துபே. கான்பூரைச் சேர்ந்தவன்” என மிரட்டும் தொனியில் கூறுவது பதிவாகியுள்ளது. துபே அப்படிச் சொன்னதும், அவரைப் பிடித்திருந்த போலீஸில் ஒருவர் பளார் என அறை விட்டார். பின்னர், அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.
3 மாநில போலீஸார் இணைந்து துபேவை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று துபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில்தான், அவரின் நெருங்கிய கூட்டாளியான அமன் துபே உத்தர பிரதேசத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த வெள்ளிக் கிழமை, கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்துக்கு விகாஸ் துபேவைக் கைதது செய்ய 8 பேர் கொண்ட போலீஸ் குழு சென்றுள்ளது. அப்போதுதான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அனைவரும் கொல்லப்பட்டனர்.
துபே மீது, கொலை, ஆள் கடத்தல், கலவரம் உள்ளிட்டப் பிரிவுகளில் 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன்னைப் போலீஸ் குழு கைது செய்து வருவதை, உள்ளூர் போலீஸ் மூலம் துபே தெரிந்து கொண்டார் என்று பகீர் தகவல் சொல்லப்படுகிறது. இதனால்தான் அவர் போலீஸாரை சுற்றி வளைத்துத் தாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடும் வேட்டைத் தொடங்கியது. அவரைப் பற்றித் துப்புக் கொடுத்தால் 5 லட்ச ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.