யோகி ஆதித்யநாத்துடன் தொடர்பில் இருந்தேன்: ரவுடி கைது குறித்து சிவராஜ் சிங் கருத்து!
New Delhi: 8 காவலர்கள் கொலை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடுப்பட்டு வந்த கான்பூர் ரவுடி விகாஸ் துபேவை கைது செய்வது தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் தொடர்பில் இருந்தேன் என மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
நான்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு மேலாக துரத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவிலில் ரவுடி விகாஸ் துபேவை போலீசார் கைது செய்துள்ளனர். உஜ்ஜைனில் உள்ள மகாகல் கோவிலில் தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த போது ரவுடி விகாஸ் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். இதனிடையே, விகாஸின் கூட்டாளிகள் இரண்டு பேர் தனித்தனி என்கவுண்டர்களில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பதிவில், நான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன். மத்திய பிரதேச காவல்துறை விகாஸ் துபேவை உத்தர பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மகாகலின் தஞ்சமடைவதால், தங்கள் பாங்கள் குறையும் என்று நினைப்பவர்கள் மகாகலை பற்றி அறிந்திருக்கவில்லை.. விகாஸ் துபேவை கைது செய்த உஜ்ஜைன் போலீசாருக்கு வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விகாஸ் துபே ஐந்து நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், உஜ்ஜைன் கோவிலை எவ்வாறு சென்றடைந்தார் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
இதனிடையே, உத்தர பிரதேச ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகூர் தனது ட்விட்டர் பதிவில், விகாஸ் துபேவை எங்களால் கைது செய்ய முடியவில்லை. அவர் உஜ்ஜைனில் சரணடைந்துள்ளார். இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு பிறகும், விகாஸ் தொடர்ந்து, பயணத்திலேயே இருந்ததால், எங்களால் அவரை கைது செய்ய முடியவில்லை. தொடர்ந்து, இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை, கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்துக்கு விகாஸ் துபேவைக் கைது செய்ய 8 பேர் கொண்ட போலீஸ் குழு சென்றுள்ளது. அப்போதுதான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அனைவரும் கொல்லப்பட்டனர். துபே மீது, கொலை, ஆள் கடத்தல், கலவரம் உள்ளிட்டப் பிரிவுகளில் 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.