Vikas Dubey Killing: இன்று காலை சுமார் 7 மணி அளவில், கான்பூருக்கு அருகே இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- நேற்று ம.பி-யில் கைது செய்யப்பட்டார் விகாஸ் துபே
- இன்று உத்தர பிரதேசத்துக்கு துபே அழைத்துச் செல்லப்பட்டார்
- அழைத்துச் செல்லும் வழியில்தான் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது
Kanpur: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவர் சென்ற கார் சிக்கியது என்றும், பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.
உத்தர பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களைக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் விகாஸ் துபேதான் இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து துபேவைக் கைது செய்ய முயன்றபோது, அவர் பல இடங்களுக்குத் தப்பிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோயிலில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அவரை இன்று அதிகாலை உத்தர பிரதேசம் அழைத்து வர முற்பட்டபோதுதான், என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை சுமார் 7 மணி அளவில், கான்பூருக்கு அருகே இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது. என்கவுன்ட்டர் நடந்தபோது சம்பவ இடத்திலிருந்த ஆஷிஷ் பஸ்வான் என்பவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “எங்களுக்கு தோட்டா சத்தம் கேட்டது… என்ன நடந்தது என்று பார்க்கச் சென்றோம். அப்போது போலீஸ் எங்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர். நாங்கள் வீட்டிற்குச் செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது,” என்று விளக்குகிறார்.
விகாஸ் துபே மீது 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கு அருகிலிருந்த இன்னொருவர், சம்பவம் பற்றி, “என்கவுன்ட்டர் நடந்த உடனேயே அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று விட்டனர்” என்கிறார்.
என்கவுன்ட்டர் குறித்து கான்பூர் போலீஸ், “விகாஸ் துபே சென்ற கார், குப்புற விழுந்து விபத்துக்கு உள்ளானது. வாகனத்திலிருந்த போலீஸ்காரர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் துபே ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. திடீரென்று துபே, காவலரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டார். அங்கிருந்து தப்பிக்கப் பார்த்தார். அவரை போலீஸ் குழு சுற்றி வளைத்தது. சரணடையுமாறு வலியுறுத்தியது. அதை அவர் கேட்க மறுத்து, துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். எனவே, தற்காப்புக்காக போலீஸ் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்,” என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
(With inputs from ANI)