ஆர்பிஐ உத்தரவை மீறி கடன் தவணையை வசூலிக்கும் வங்கி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின்
மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது, திருப்பூரை சேர்ந்த விவசாயி ஓருவர் ஆக்சிஸ் வங்கியில் வாங்கிய கடன் தவணையைத் திருப்பி செலுத்துமாறு அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், தற்கொலை செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன் தவணைகளை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் நாட்டு மக்கள் முன்பும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்து, அறிவித்தன. ஆனால், மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கித் தவணையைச் செலுத்த வேண்டும் என்று விவசாயிகளை பல வங்கிகள் மிரட்டி வருகின்றன.
வங்கிகளின் இந்த நடவடிக்கைகளை, மத்திய அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும் தலையிட்டுத் திருத்தாமல் அதனை வேடிக்கை பார்ப்பது என்பது கண்டனத்திற்குரியது.
எனவே மத்திய ரிசரவ் வங்கியின் அறிவிப்பிற்கு எதிராக வங்கிக் கடன் தவணையை திருப்பிச் செலுத்துமாறு மிரட்டப்பட்டதால், விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் செய்யும் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களைக் கைது செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து, மத்திய ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவினை மீறிக் கடன் தவணைகளை வசூலித்து வரும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.