This Article is From Jul 27, 2019

தொடரும் வன்முறை சம்பவம்: சென்னையில் 58 ரூட்டு தலைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

58 மாணவர்கள் மீது 107 என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடரும் வன்முறை சம்பவம்: சென்னையில் 58 ரூட்டு தலைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் மோதிக் கொண்ட நிலையில் பல்வேறு மாநகர பேருந்து வழித்தடங்களில் வன்முறையில் ஈடுபட்ட 58 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே, கடந்த 23 ஆம் தேதி, அரசு பேருந்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இந்த மோதல் குறித்தான வீடியோ ஒன்று வெளியாகி தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ரூட்டு தல' யார் என்பதில் இருந்த பிரச்னைதான் தற்போது அரிவாள் வெட்டு வரை வந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கல்லூரி மாணவர்களுடைய மோதலை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்தோடும் மட்டும் முதல்வர்களோடும் அதேபோல மாணவர்களுடைய பெற்றோர்களோடும் ஆலோசனை வழங்கி அறிவுரை வழங்கக்கூடிய சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. 
அதேபோல காவல்துறை உயர் அதிகாரிகள் அந்தெந்த கல்லூரி முதல்வரை அழைத்து இது போன்ற மாணவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பது தொடர்பான ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. 

இதன் ஒரு கட்டமாக 19 வழித்தளங்களில் இது போன்ற ரூட்டு தல பிரச்சனைக்குரிய மாணவர்கள் பயணம் செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த மாணவர்கள் முழுவதுமாக கணக்கெடுக்கப்பட்டு அவர்கள் மீது 107 என்ற குற்றவியல் முறை சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக வடக்கு மண்டலத்தில் 21 மாணவர்கள் மீதும் கிழக்கு மண்டலத்தில் 1 மாணவர் மீதும் மேற்கு மண்டலத்தில் 36 மாணவர்கள் மீதும் காவல் எல்லைக்கு உட்பட்டு மொத்தம் 58 மாணவர்கள் மீது 107 என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதை மீறியும் மாணவர்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களை நேரடியாக சிறைக்கு அனுப்புவதற்கான அதிகாரம் அந்த காவல்துறை துணை ஆணையருக்கு இருக்கிறது. எனவே மாணவர்கள் இதுபோன்ற தொடர்ந்து செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதும் உறுதி மொழியாக அவர்கள் காவல்துறையிடம் வழங்கியுள்ளனர். 

முன்னதாக, அம்பத்தூர் காவல் நிலைய துணை ஆணையர் ஈஷ்வர், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 ‘ரூட்டு தல' மாணவர்களை வரவழைத்தவர். அவர்களிடம் இனி, தவறு செய்ய மாட்டோம் என்று கூறும்படியான பிரமாணப் பத்திரத்தை எழுதி வாங்கிக் கொண்டார். மேலும், இனி ஒழுங்காக நடந்து கொள்வோம் என்று சொல்லும்படியான உறுதிமொழியையும் ஏற்க வைத்தார். 

‘ரூட் தலைகள்', “எந்த விரும்பத்தகாத செயலையும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் பெற்றோருக்கும் நல்ல பெயரை வாங்கி தருவோம் என்று உறுதியளிக்கிறோம். தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறோம் என்று உறுதியளிக்கிறோம்” என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

.