This Article is From Dec 15, 2019

Citizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்!

வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வடகிழக்குப் போராட்டங்கள் மேற்கு வங்கத்துக்கும் பரவியுள்ளது. அங்கு ரயில்கள் கொளுத்தப்பட்டு சாலைகள் முடக்கப்பட்டுள்ளன

New Delhi:

Citizenship Law Protest - சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இன்று டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். தெற்கு டெல்லியில் நடந்த இந்தப் போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தொடர்ந்து போலீஸ் போராட்டக்காரர்களை அடக்க தடியடி நடத்தி, கண்ணீர் புகைப் குண்டுகளை வீசியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அடக்க போலீஸ் முயன்றுள்ளது. 

டெல்லி போலீஸ், 100 முதல் 200 பேரே போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கணித்திருந்தது. ஆனால், மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

போராட்டத்தின்போது, 2 தீயணைப்பு வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகவும், தீயணைப்புத் துறையின் ஒரு வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “எங்கள் போராட்டம் அமைதியாக நடக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்திருந்தோம். போராட்டத்தில் வன்முறையைக் கையாண்ட யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்கின்றோம். எங்கள் மீது தடியடி நடத்தப்பட்டபோதும், மாணவிகள் மோசமாக தாக்கப்பட்ட போதும் நாங்கள் பொறுமை காத்தோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர். 

r5093ql8

Citizenship (Amendment) Act-க்கு எதிராக நடந்தப் போராட்டத்தில் 3 பேருந்துகள் கொளுத்தப்பட்டன

ஜே.எம்.ஐ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான, நஜ்மா அக்தர், “போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையான மாணவர்கள் இன்னும் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேதான் இருக்கிறார்கள். சட்ட சாசன நடைமுறையை அவர்கள் பின்பற்றுவார்கள். 

வளாகத்துக்கு வெளியே மாணவர்கள் சென்றால் அவர்களுக்கு எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது. மாணவர்கள் அனைவரும் வளாகத்துக்குள் வர வேண்டும்,” என்று NDTV-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த போரட்டங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 27 பேருக்குக் காயம் ஏற்பட்டு, கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 

வடகிழக்குப் போராட்டங்கள் மேற்கு வங்கத்துக்கும் பரவியுள்ளது. அங்கு ரயில்கள் கொளுத்தப்பட்டு சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் சில மாவட்டங்களில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளன. 


 

.