கிரா என்னும் அந்த குழந்தை, சாலையில் நடனமாட, அவரின் தாத்தாவான மார்வின், சாலையின் மறுபுறத்திலிருந்து ஜாலியாக பதில் நடனமாடுகிறார்.
கொரோனா பரவாமல் இருக்க ஒருவரிடத்திலிருந்து இன்னொருவர் விலகியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இந்த விலகியிருத்தல் என்பது ஒரு தாத்தாவையும் அவரின் செல்லப் பேத்தியையும் எந்த விதத்திலும் மகிழ்வாக இருப்பதிலிருந்து நிறுத்தவில்லை.
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், தாத்தாவும் அவரின் பேத்தியும் சாலையில் சந்தோஷமாக நடனமாடும் வீடியோ பார்ப்போர் மனதைக் கொள்ளையடித்துள்ளது. இது குறித்த வீடியோவை முதியவரின் மகளான ஷெர்ரி நீலே பகிர்ந்துள்ளார்.
டுடே மேகஸின் அளிக்கும் தகவல்படி, டென்னஸ்ஸியில் உள்ள நாஷ்வில் பகுதியில்தான், முதிவயரான மார்வின் வசித்து வருகிறார். அருகிலேயே தனது மகளான ஷெர்ரியும் வசித்து வருகிறார். அவருக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது. பிறந்ததிலிருந்து தன் பேத்தியுடன் மிக நெருக்கமானவராக இருந்துள்ளார் மார்வின்.
ஆனால், வைரஸ் தொற்றால் தற்போது விலகியிருத்தல் அவசியம் என்று சொல்வதால், 6 வயதாகும் பேத்தியை நெருங்க முடியாமல் தவித்துள்ளார் மார்வின். ஆனால், இருவரும் தற்போது வேறொரு வழி மூலம் விளையாடி வருகின்றனர்.
கிரா என்னும் அந்த குழந்தை, சாலையில் நடனமாட, அவரின் தாத்தாவான மார்வின், சாலையின் மறுபுறத்திலிருந்து ஜாலியாக பதில் நடனமாடுகிறார். இது குறித்த வீடியோதான் தற்போது படுவைரலாக மாறி வருகிறது.
“இந்த தெருதான் எங்களையும் என் பெற்றோரையும் பிரிப்பது. தினமும் பலமுறை இந்த தெருவைக் கடப்பேன். கிரா, அவரின் தாத்தாவை அவ்வளவு நேசிக்கிறார். ஆனாலும், வைரஸ் அவர்களைப் பிரித்துவிட்டது. இதனால், தினமும் இப்போதெல்லாம் ஒரே டான்ஸ்தான்,” என்று மகிழ்ச்சித் ததும்ப ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஷெர்ரி.
ஆன்லைனில் பகிரப்பட்டதில் இருந்து இதுவரை, இந்த வீடியோ 2.3 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 7,000 முறை பகிரப்பட்டுள்ளது. பலரும் ‘வாவ்' போட்டு கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
“அற்புதம். மிகவும் மகிழ்வளிக்கிறது,” என்கிறார் ஒரு ஃபேஸ்புக் பயனர். இன்னொருவரோ, “பேத்திக்கும் தாத்தாவுக்கும் இருக்கும் அன்பை மீற எதுவும் கிடையாது,” என்கிறார்.
Click for more
trending news