This Article is From Jun 04, 2020

வைரல்: மானை தன் பிடியில் இறுக்கி உணவாக்க துடித்த மலைப் பாம்பு… கடைசியில வந்த ஒரு ட்விஸ்ட்!!

“அந்த மனிதர் மானுக்கு உதவி செய்தது சரியான விஷயமே,” என்கிறார் ஒருவர்.

வைரல்: மானை தன் பிடியில் இறுக்கி உணவாக்க துடித்த மலைப் பாம்பு… கடைசியில வந்த ஒரு ட்விஸ்ட்!!

அதை மறுக்கும் இன்னொருவர், “இயற்கையின் வழியை நாம் மாற்றியமைக்கக் கூடாது,” என்கிறார். 

காடுகளில் இரைக்கும் வேட்டையாடிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஜெயித்தால் கிடைப்பது வாழ்க்கை. அப்படி வாழ்க்கைக்கான போராட்டத்தில் எந்த உயிரினம் செய்வது சரி, எது செய்வது தவறு என்று சொல்வதில் எந்த நியாயமும் இருக்காது. ஆனால், சமீபத்தில் காட்டு விலங்குகள் சண்டை குறித்து வெளியான ஒரு வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. தாய்லாந்து நாட்டு உயிரியல் பூங்கா ஒன்றில் பைத்தான் வகை மலைப் பாம்பு, துள்ளி குதிக்கும் புள்ளி மானை தன் பிடியில் இறுக்கிப் பிடித்து இரையாக்கப் பார்த்தது. ஆனால், இரு உயிரினங்களுக்கு இடையிலான சண்டையில் மூன்றாவதாக மனிதக் குறுக்கீடு ஏற்பட்டது. இதனால், சண்டையின் தன்மையே தலைகீழாக மாறியது. இந்த தலையீடு குறித்துதான் தற்போது விவாதம் கிளம்பியிருக்கிறது. 

24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவை, டூசிட் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தாய்லாந்தின் காவ் கியோவ் உயிரியல் பூங்காவில் இந்த வீடியோ படமாக்கப்பட்டது என்று அவர் சொல்கிறார். காரிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு தடிமனான பைத்தான் வகை மலைப் பாம்பு, இள வயது மானை அப்படியே தன் பிடியில் இறுக்குகிறது. மலைப் பாம்புகள் தங்கள் இரையைக் கொல்வதற்குப் பயன்படுத்தும் முறைதான் இது. பாம்பு, கிட்டத்தட்ட மானின் கதையை முடிக்கும் நேரத்தில், ஒரு குச்சியை வைத்து அதை உசுப்புகிறார் ஒரு மனிதர். 

என்னவென்று புரியாத பாம்பு, பிடியைத் தளர்த்துகிறது. இதுதான் சரியான தருணம் என்று உணரும் மான், துள்ளி குதித்து ஓடுகிறது. மீண்டும் உயிர் வாழ அதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. 

வீடியோவைப் பார்க்க:

ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோவுக்குப் பல்லாயிரம் பார்வைகள் கிடைத்து வருகின்றன. பலரும் சர்ச்சைக்குரிய இந்த வீடியோ குறித்து தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். 

“அந்த மனிதர் மானுக்கு உதவி செய்தது சரியான விஷயமே,” என்கிறார் ஒருவர்.

அதற்கு இன்னொருவர், ‘காட்டில் உள்ள உணவுச் சங்கிலியில் எந்தவித மாற்றத்தையும் நாம் வலிந்து செய்யக் கூடாது,' என்று எதிர்வாதம் வைக்கிறார். 

அந்த வீடியோ இந்தியாவைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் ஒருவரால் ட்விட்டரில் பகிரப்பட்டு, ‘அந்த மனிதரின் செயல் சரியா? தவறா?' எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 
 

அதற்கு இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா, “சரியான விஷயத்திற்கும் கருணையுள்ள விஷயத்திற்கும் இடையில் எதாவது ஒன்றைத்தான் செய்ய முடியும் என்றால், கருணையுள்ள விஷயத்தையே செய்ய வேண்டும்,” என்று மனிதனின் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார். 

அதை மறுக்கும் இன்னொருவர், “இயற்கையின் வழியை நாம் மாற்றியமைக்கக் கூடாது,” என்கிறார். 

Click for more trending news


.