"அதன் குட்டி என்று எங்களுக்குப் புரிந்ததே தவிர, மிகவும் அரிதான களப்பினமான..."
ஒரு விலங்கினம் இன்னொரு விலங்கினத்துடன் இணைந்து புதுவித உயிரை உருவாக்குவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அப்படியொரு அரிய விஷயம் கென்யாவில் நடந்துள்ளது. அங்கு வரிக்குதிரையும் கழுதையும் இணைந்து, ‘Zonkey' (ஜாங்கி) என்னும் புதுவித உயிரினத்திற்கு பிறப்பு கொடுத்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கென்யாவில் உள்ள ஷெல்டிரிக் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு இது குறித்த தகவல் வந்துள்ளது. அவர்கள் அந்தக் குட்டி ஜாங்கியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, அதன் கதையையும் உலகிற்குப் பகிர்ந்துள்ளனர்.
“கடந்த ஆண்டு, மிகவும் ஆபத்தான பகுதியிலிருந்த ஒரு வரிக்குதிரையை நாங்கள், கிழக்கு சாவோ தேசியப் பூங்காவில் அவிழ்த்து விட்டோம். பூங்காவில் விட்டதிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது அந்த வரிக்குதிரை.
சமீபத்தில் அந்த வரிக்குதிரையைப் பார்த்தபோது, ஒரு குட்டியை உடன் வைத்திருந்தது. அதன் குட்டி என்று எங்களுக்குப் புரிந்ததே தவிர, மிகவும் அரிதான கலப்பினமான ஜாங்கி, அந்தக் குட்டி என்று எங்களுக்குத் தெரியவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டோம்.
இந்த ஜாங்கி, ஆரோக்கியமாக வளர முடியும். ஆனால், அதனால் இன்னொரு குட்டியை ஈன முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகளை இயற்கை வழங்கவில்லை,” என்று ஷெல்டிரிக் வன விலங்கு அறக்கட்டளை, அந்த ஸ்பெஷல் விலங்கு பற்றிய கதையை, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது.
இந்த ஃபேஸ்புக் போஸ்ட், படுவைரலாக மாறி, பலரை நெகிழ வைத்துள்ளது.
போஸ்டிற்குக் கீழ் ஒருவர், “இயற்கை மிக அற்புதமானது. அந்த தாயும் குட்டியும் நன்றாக உள்ளதை நினைத்து மகிழ்ச்சி,” என்கிறார். இன்னொருவர், “நான் பார்த்ததிலேயே இந்த ஜாங்கிதான் மிக கியூட்டான உயிரினம்,” என்று பூரிக்கிறார்.
Click for more
trending news