This Article is From Jul 16, 2020

சடாரென்று படகை கவிழ்த்து தாக்குதலில் ஈடுபட்ட முதலை… நடுங்கவைக்கும் வீடியோ!!!

“உங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட 2 நிமிடங்களாக அவை இருந்திருக்க வேண்டும்” என்கிறார் ஒருவர். 

சடாரென்று படகை கவிழ்த்து தாக்குதலில் ஈடுபட்ட முதலை… நடுங்கவைக்கும் வீடியோ!!!

ஜாய்ஸ் மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த மொத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ, யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த காணொலியானது பார்ப்போரை நடுங்க வைக்கும் வகையில் அதிர்ச்சி கொடுக்கிறது. 

கரோலினாவின் வக்காமாவ் நதியில், தன் படகை அமைதியாக செலுத்திச் செல்கிறார் பீட் ஜாய்ஸ். திடீரென்று நீருக்கு அடியிலிருந்து ஒரு அலிகேட்டர் வகை முதலை, படகை பலமாக முட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத ஜாய்ஸ், நிலை தடுமாறுகிறார். படகும் பக்கவாட்டில் சாய்கிறது. ஆனால், பிரச்னையின் வீரியத்தைப் புரிந்து கொள்ளும் ஜாய்ஸ் அருகில் இருக்கும் மரக் கிளைகளைப் பிடித்து மேலே எழுகிறார். அங்கிருந்து தப்பிக்க, மின்னல் வேகத்தில் துடுப்புப் போடுகிறார். ‘டப் டப்' என நெஞ்சு பதறிக் கொண்டிருக்க வீடியோ முடிகிறது. 

யூடியூபில் வீடியோவுடன் ஜாய்ஸ், “வன விலங்கிடமிருந்து எனக்குக் கிடைத்த வரவேற்பு,” என கிண்டல் தொனியில் 2 நிமிட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதைப் பார்க்க:

இந்த சம்பவம் குறித்து என்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜாய்ஸ், “அந்த முதலை என்னை நோக்கி வருவதற்கு சில கணங்களுக்கு முன்னர்தான் அந்த இடத்திலிருந்து திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். அந்த முதலை எந்தளவுக்கு பலமான தாக்குதல் நடத்தியது என்பது வீடியோவில் பதிவாகவில்லை. அது இடித்ததில் என்னால் படகில் ஸ்திரமாக உட்காரவே முடியவில்லை. உண்மையில் வீடியோவில் காட்டப்படும் ஒரு தாக்குதலோடு முதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து என்னைத் துரத்தியது” எனக் கூறி அதிர்ச்சிக் கிளப்புகிறார். 

ஜாய்ஸ் மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த மொத்த சம்பவமும் பதிவாகியுள்ளது. இது குறித்தான வீடியோ பல லட்சம் வியூஸ்களை அள்ளி வருகிறது. 

பலரும் அதிர்ச்சி கமென்டுகளை இட்டு வருகின்றனர். 

“உங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட 2 நிமிடங்களாக அவை இருந்திருக்க வேண்டும்” என்கிறார் ஒருவர். 

இன்னொருவரோ, “இது பல நாட்களுக்கு கெட்டக் கனவைக் கொடுக்கும்” என்கிறார். 

கரோலினா வனவிலங்கு வள கமிஷனின் உயிரியலாளர், அலிசியா டேவிஸ், இச்சம்பவம் பற்றி சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘ஆண்டின் இந்தக் காலம், அலிகேட்டர்கள் முட்டையிடும் நேரமாகும். முட்டையைப் பாதுகாக்க அவை மூர்க்கமாக நடந்து கொள்ளும்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஒரு பெண் முதலையாக இருக்கலாம். அது முட்டையிட்ட இடத்துக்குப் பக்கத்தில் படகு சென்றிருக்கலாம். இதனால் அச்சமூட்ட தாக்குதல் தொடுத்திருக்கலாம்' என்று தகவல் கூறுகிறார். 

Click for more trending news


.