This Article is From May 29, 2020

கொரோனாவால் உயிரிழந்த உரிமையாளர்; மருத்துவமனையிலேயே 3 மாதம் காத்திருந்த பாச நாய்!

சமூக வலைதளங்களில் ஷாவ்-பாவின் கதை வைரலாக, அது உலகின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

கொரோனாவால் உயிரிழந்த உரிமையாளர்; மருத்துவமனையிலேயே 3 மாதம் காத்திருந்த பாச நாய்!

ஷாவ்-பாவ் குறித்து அறிந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதைப் பரிவோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் மூலம் உயிரிழந்த தன் உரிமையாளரை பிரிய மனமில்லாமல், மருத்துவமனை வளாகத்திலேயே கிட்டத்தட்ட 3 மாதங்கள் காத்திருந்திருக்கிறது ஒரு பாச நாய். இந்த சம்பவம் குறித்தான முழுக் கதையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை உருக வைத்துள்ளது. 

சீனாவின் உஹான் நகரத்தில் வயதான ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நகரத்தின் டைகாங் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இருந்தும் அவரால் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் உயிரிழந்தார். அவரது நாய்தான் ஷாவ்-பாவ். தன் உரிமையாளர் இறந்ததை அறியாத அந்த நாய், டைகாங் மருத்துவமனையிலேயே 3 மாதங்கள் காத்திருந்தது. 

ஷாவ்-பாவ் குறித்து அறிந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதைப் பரிவோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர். பலரும் அதற்கு உணவு கொடுத்து அரவணைத்துள்ளார்கள். சில வாரங்களுக்குப் பின்னர் மருத்துவமனைக்கு அருகில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் பெண்ணான வூ குஃபேன், ஷாவ்-பாவை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார். 

“ஏப்ரல் மாதத்தில் நான் மீண்டும் பணிக்குத் திரும்பியபோது அந்த நாயைப் பார்த்தேன். நான் அந்த நாயை ஷாவ்-பாவ் என்று அழைக்க ஆரம்பித்தேன். வயதான ஷாவ்-பாவின் உரிமையாளர் கொரோனா வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார் என்ற தகவலை அவர்கள் சொன்னார்கள். அது ஷாவ்-பாவுக்குத் தெரியவில்லை. மருத்துவமனையிலேயே ஏக்கத்துடன் காத்திருந்தது,” என்று டெய்லி மெயில் செய்தி நிறுவனத்திடம் பகிர்கிறார் குஃபேன். 

சமூக வலைதளங்களில் ஷாவ்-பாவின் கதை வைரலாக, அது உலகின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

மருத்துவமனையில் உள்ள பல நோயாளிகள் ஷாவ்-பாவ் குறித்து புகார் அளிக்க, தற்போது உஹானில் உள்ள சிறிய விலக்கு பாதுகாப்பு அமைப்பு அதைப் பராமரித்து வருகிறது. யாராவது தத்தெடுப்பதற்காக தற்போது காத்திருக்கிறது ஷாவ்-பாவ்.

Click for more trending news


.