Viral: இந்தப் படம் உண்மையானதுதான். ஆனால்...
இணையதளங்களில் உலவும் சில புகைப்படங்களை நம்மால் எத்தனை முறை பார்த்தாலும் நம்ப முடியாது. ஆனால், அது உண்மையாக இருக்குமோ என்று எழும் சந்தேகத்தையும் புறந்தள்ள முடியாது. அப்படியான ஒரு புகைப்படம் பல நெட்டிசன்களைக் குடைந்து வருகிறது. ‘உலகில் மனிதர்கள் போன்ற உயரமான ராட்சத வௌவால்கள் இருக்கிறது. அது குறித்தான படம்தான் இது' என்று தலைகீழாக தொங்கும் வௌவால் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைலாக பரவி வருகிறது. இது பழைய படம்தான் என்றாலும், ட்விட்டரில் ஒரு பயனர் வௌவால் படத்தைப் பகிர, பலரை திக்குமுக்காட வைத்துள்ளது.
ட்விட்டரில் வௌவால் குறித்தான படத்தையும் தகவலையும் பகிர்ந்த ஒரு பயனர், “பிலிப்பைன்ஸில் மனிதர்கள் உயரத்துக்கு வௌவால்கள் இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? இதுதான் அது,” என வௌவாலின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்திற்குப் பல லட்சம் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. பலர் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் பதிவுக்குக் கீழ் கருத்திட்டு வந்தாலும், சிலர், ‘இந்தப் படம் உண்மையானதுதானா?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இந்தப் படம் உண்மையானதுதான். ஆனால், அதில் சொல்லப்பட்ட விஷயம் சற்று திரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Snopes என்னும் உண்மை அறியும் இணையதளம் அளிக்கும் தகவல்படி, இந்த வௌவாலின் பெயர் golden-capped fruit bat என்றும், பிலிப்பைன்ஸில் இது வாழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பழந்தின்னி வௌவால்களின் இறக்கைகள் 5.5 அடி வரை வளரும் என்றும், அதே நேரத்தில் அதன் உடல் ஓரடி அளவுக்கே வளரும் என்றும் கூறப்படுகிறது. அதன் பிரமாண்ட இறக்கையின் அளவைத்தான் அதன் உயரமாக பலர் திரித்துச் சொல்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர், “இந்த வௌவால்களின் இறக்கைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உடல் அந்தளவுக்குப் பெரியதாக இருக்காது. ஒரு சிறிய நாயின் அளவில்தான் அது இருக்கும். இந்த வௌவால்கள் மிக சாதுவானவைதான்,” என்று விளக்கியுள்ளார்.
Click for more
trending news