"எங்களை அந்த தாய் யானை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதையும் புரிந்து கொண்டோம்."
கடந்த 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. காட்டுக்குள் செய்வதறியாது தவித்த குட்டி யானையை, தன் தோளில் சுமந்து சென்று தாய் யானையிடம் சேர்த்த தமிழக வன ஊழியரான பழனிச்சாமி சரத்குமாரின் கதைதான், சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பிபிசி செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி, தமிழக வன ஊழியரான பழனிச்சாமி சரத்குமார், மேட்டுப்பாளையத்தில் இருந்துள்ளார். அப்போது அவரின் குழுவுக்கு ஒரு அவசரச் செய்தி வந்துள்ளது.
அருகில் உள்ள ஒரு இடத்தில் பெண் யானை ஒன்று, சாலையை மறித்து பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக அந்த செய்தியில் தகவல். பழனிச்சாமி தன் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பழனிச்சாமி மற்றும் அவரது குழுவினர் பட்டாசுகளை வெடிக்க வைத்து, யானையை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள், வேறு எதாவது யானை அருகில் உள்ளதா என்று தேடியுள்ளனர். அப்போது ஒரு குட்டி யானை, அருகில் உள்ள பள்ளத்தில் சிக்கித் தவித்ததைப் பார்த்துள்ளனர்.
“அந்தக் குட்டி யானை சிறிய பள்ளத்தில் மாட்டிக் கொண்டதைப் பார்த்தோம். பல மணி நேரம், பள்ளத்திலிருந்து வெளியே வர அந்த யானை முயன்று, அசதியானது புரிந்தது. நாங்கள் அதை வெளியில் எடுத்தோம்.
ஆனால், அந்த குட்டி யானை நடக்காமல் அப்படியே நின்றிருந்தது. அதன் தாய் அருகில் இல்லை என்பதை உணர்ந்த அந்த யானை, நகராமல் முரண்டு பிடித்தது.
நாங்கள் 4 பேர் சேர்ந்து யானையைத் தூக்கினோம். சாலையின் மறு பக்கத்தில் நின்றிருந்த அதன் தாயிடம் குட்டியை சேர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால், எங்களை அந்த தாய் யானை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதையும் புரிந்து கொண்டோம்.
இதனால், நான் மட்டும் குட்டி யானையை தோளில் சுமந்து தாய் யானைக்கு அருகில் விட்டேன். அதன் பிறகு இரு யானைகளும் இயல்பாக அங்கிருந்து நகர்ந்து சென்றன,” என்று நடந்ததை விவரிக்கிறார் பழனிச்சாமி. சுமார் 100 கிலோ எடை கொண்ட குட்டி யானையை தன் தோளில் சுமந்து, தாய் யானையிடம் சேர்த்த பழனிச்சாமியின் கதை பலரை நெகிழ வைத்துள்ளது.
அவரின் கதையை மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்தது, இந்திய வனத் துறை அதிகாரியான தீபிகா பாஜ்பாய். அவரின் ட்விட்டர் போஸ்டுக்குக் கீழ், பலரும் பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.
Click for more
trending news