Coronavirus பீதி: ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 50,000 முறை பார்க்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, ஒருவரின் கையைப் பிடித்து ஷேக் செய்து நட்பு பாராட்டவே பலர் அஞ்சுகின்றனர். இதைச் சரிசெய்யும் வகையில் புதிய வகையிலான ‘ஷேக்'-ஐ மக்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், இருவர் கால்களை வைத்து ஷேக் செய்து கொள்கின்றனர். கட்டிப்பிடித்தோ அல்லது கையைக் குலுக்கியோ நட்பு பாராட்டாமல், சூழ்நிலைக்குத் தகுந்தது போல இப்படி இவர்கள் நட்பு பாராட்டியது வைரலாகியுள்ளது. ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பலராலும் விரும்பப்பட்டுள்ளது.
சீனாவில் பல இடங்களில், ‘மற்றவர்களின் கைகளைக் குலுக்காதீர்கள். அதற்குப் பதில் கையைக் கூப்பி மரியாதை செலுத்துங்கள்' என்று பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தொடுதல் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இந்த யுக்தியைச் சீன அரசு தரப்பு கையாள்கிறது.
தற்போது கால்கள் மூலம் ஷேக் செய்வதை ‘உஹான் ஷேக்' என அழைக்கப்படுகிறது. சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவை கீழே பார்க்கவும்:
ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 50,000 முறை பார்க்கப்பட்டுள்ளன. ஒரு ட்விட்டர் பயனர், “மனிதர்கள் சூழலுக்குத் தகுந்தது போல மாறிக் கொள்கிறார்கள்” என எழுதியுள்ளார். இன்னொருவரோ, “இனி இப்படித்தான் நான் ஷேக் செய்யப் போகிறேன்” என்றுள்ளார்.
சீனாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் மற்றவர்களைத் தொடுவதைத் தவிர்க்குமாறு அரசு தரப்புகள் அறிவுறுத்தி வருகின்றன.
பிரான்ஸ் நாட்டில், ஒருவரைச் சந்திக்கும் போது கன்னத்தில் முத்தமிடுவது வழக்கம். அதைத் தவிர்க்குமாறு செய்தித் தாள்களில் பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் மூக்கோடு மூக்கு உரசி மரியாதை செலுத்துவது வழக்கம். இதையும் நிறுத்துமாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
.
Click for more
trending news