This Article is From Jan 21, 2019

விராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு!

Viralimalai jallikattu 2019: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி புதிய உலக சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விராலிமலை ஜல்லிகட்டு கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிப்பு!

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1353 காளைகள், 424 காளையர் என பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணியளவில் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேன் மையங்களும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வருகை தந்திருந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போட்டி மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நாள் முழுவதும் காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் விடாமல் மல்லுக்கட்டினர். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று கொண்டிருந்த போது, காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த ராமு (35) என்பவர் உயிரிழந்தார். இதேபோல், மாடு முட்டியதால், பலத்த காயமடைந்த திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (43) என்பவரும் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41 பேர் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியின் இறுதியில் 21 காளைகளை பிடித்த திருச்சி கொட்டப்பட்டு முருகானந்தம் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 16 காளைகளை அடக்கிய காட்டூர் கார்த்தி 2ஆம் இடமும், 14 காளைகளை அடக்கிய செங்குறிச்சி ஆனந்த்  3ஆம் இடமும் பிடித்தனர்.

சிறந்த காளையாக ராப்பூசல் முருகானந்தம் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தங்கபுரம்பட்டி விக்னேஷ் என்பவரின் காளைக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது.

ஒரே நாளில்  1353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை உலக சாதனையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கின்னல் சாதனை ஆங்கீகாரக்குழு நிர்வாகிகள் மெலடியோ, மார்க் ஆகியோர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை போட்டியின் இறுதியில் வழங்கினர்.

 

மேலும் படிக்க : கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 2 பேர் உயிரிழப்பு!
 


 

.