இளம் வயதில் அதிக ரன்களை கடந்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடித்த சாதனையாளர் வீராட் கோலி இன்று தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வீராட் கோலி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். இளம் வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் பங்கேற்ற கோலி, கோச் ராஜ்குமார் சர்மாவின் கீழ் பயிற்சி செய்து வந்தார். 2008-ம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமான வீராட்கோலி தொடக்கத்தில் பல சரிவுகளை சந்தித்தார். 2010க்குப் பின் முற்றிலும் ஏற்றத்தை மட்டுமே தன் வாழ்வில் கண்டு வருகிறார். ஆண்டுக்கு குறைந்த பட்சம் இரண்டு சதங்கள், இரண்டு அரை சதங்கள் என விளாசித் தள்ளி வருகிறார்.
சர்வதேச அரங்கில் விளையாடத் தொடங்கிய முதல் ஆறு ஆண்டுகளில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கோலி தற்போது 4 ஆண்டுகளில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்துள்ளார். நான்காயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்று சச்சின் செய்த சாதனையை சமீபத்தில் கோலி முறியடித்தார். வீராட் கோலி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த தொடங்கிய பின் 6 இரட்டை சதங்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பேட் மட்டுந்தான் பேசும்
சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 37வது சதத்தை அடித்தார். அதன்பின் வீராட்கோலி தன் பேட்தான் பேசும் என்பதை உணர்த்தும் வகையில் சைகை செய்தார். கோலியின் இந்த சைகை சமூக வலைதளங்களில் வைரலானது.
பாராட்டு மழையில் கோலி
ஐசிசியின் ஒருநாள் வீரர் விருது, ஆல்ரவுண்டர் விருது என்று பல விருதுகளைப் பெற்ற வீராட் கோலி சமீபத்தில் மத்திய அரசு வழங்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். சாதனையாளரான கோலி இன்று 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் வீராட் கோலிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பிறந்த நாளான இன்று தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.